நீ நடிச்ச படம் பேரு கத்தி, ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி:டி.ராஜேந்தரின் புலி பஞ்ச் !

Filed under: சினிமா,சென்னை |

மகாபலிபுரம்: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய டி.ராஜேந்தர்,” நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

புலி திரைப்படத்தின் யாசை வெளியீட்டு விழா மகாபலிபுரத்தில் நடந்தது.இந்த விழாவில் நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி கபூர், அட்டக்கத்தி நந்திதா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்ட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள்  எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய் சேதுபதி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு விஜய் முதல் ஆளாக வந்திருந்து, வந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார். ஆடியோ வெளியீட்டு விழாவில் புலி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். மேலும், விஜய்- ஸ்ருதிஹாசன் இணைந்து பாடிய பாடலை ஸ்ருதிஹாசன் மேடையில் பாடினார். பின்னர் விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மேடையில் ஏறி படத்தை வாழ்த்திப் பேசினார்கள்.  

அப்போது டி.ராஜேந்தர் பேசும்போது, ‘‘விஜய் ஒரு உண்மையான தமிழன். என்னுடைய மகன் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகன் என்று தெரிந்தும் தனது சகோதரனாக நினைத்து அவனுடைய படம் வெளிவர உதவி செய்துள்ளார். அவரது உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். தம்பி விஜய் உன்னிடம் இல்லை தலைக்கணம். நீ பேசமாட்ட வசனங்கள் கத்தி, நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி என தனது  பஞ்ச் டயலாக்குகளை வரிசையாகக்கொட்டி வாழ்த்தினார்.

அவர் பேசிய வசனங்களையெல்லாம்  மேடைக்கு கீழே அமர்ந்து இருந்த விஜய் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் டி.ராஜேந்தரின் வசனங்களில் அனல் பறக்கவே, விஜய் உட்கார முடியாமல் உற்சாகத்தில்  நேராக மேடையேறி சென்று டி.ராஜேந்தரை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அவருக்கு சால்வை போத்தி மரியாதை செலுத்தினார்.

இருப்பினும், டி.ராஜேந்தர் தொடர்ந்து விஜய்யை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. அவரின் ஒவ்வொரு  பஞ்ச் வசனங்களுக்கும் ரசிகர்கள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுததினர்.இதனால் விழா களைகட்டியது.

இந்த ஆடியோ வெளியீட்டில் டி.ராஜேந்தரின் பேச்சுத்தான் மிகப்பெரிய ஹைலைட்டாக  அமைந்தது. அவரைத் தொடர்ந்து விழாவுக்கு வந்திருந்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள் மேடையேறி படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.