பரபரப்பு ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி !

Filed under: இந்தியா,விளையாட்டு |

Dhoni_2786280b_2786287fஇந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நேற்று  நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

 கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளுக்கு 136 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் மஹமதுல்லாவும், முஸ்தஃபிர் ரஹிமும் இருக்க, பாண்டியா பந்துவீசினார்.

முதல் பந்தில் மஹமதுல்லா 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளும் பவுண்டரிக்கு விரைந்தது. ஆட்டம் முடிந்தது, வங்கதேசம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை பாண்டிய எடுக்க, ஆட்டம் மீண்டும் பரபரப்பானது.

கடைசி பந்தில் 2 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், ஷுவகதா ஹோம் எதிர்கொண்டார். பாண்டியா வீசிய பந்து மட்டைக்கு எட்டாமல், ஆஃப் ஸைட் உயர சென்று தோனியின் கைகளில் தஞ்சமடைந்தது. பந்தை அடிக்கவில்லையென்றாலும் ரன் எடுக்க இரண்டு பேட்ஸ்மென்களும் விரைந்தனர். கையில் உறை அணியாமல் இதற்காகவே காத்திருந்த தோனி, பந்தை பிடித்து ஓடி வந்து உடனடியாக ரன் அவுட் செய்தார். இதனால் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.

இந்தியா நிர்ணயித்த 147 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர் தமீம் இக்பால் சரியான துவக்கத்தைத் தந்தார். மற்றொரு துவக்க வீரர் மிதுன் சீக்கிரம் ஆட்டமிழந்தாலும், தமீம் இந்தியாவின் பந்துவீச்சுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தார். முக்கியமாக பும்ரா வீசிய 6-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.

தமீம் இக்பால் ஜடேஜாவின் பந்துவீச்சில் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க பொறுப்பாக ஆடிவந்த சபீர் ரஹ்மானும் 26 ரன்களுக்கு ரெய்னாவின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார். 10 ஓவர்களில் 70 ரன்கள் தேவையாயிருக்க வங்கதேசத்தின் வசம் 7 விக்கெட்டுகள் இருந்தது.

ஆனால் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் வங்கதேசத்தின் ரன் சேர்ப்பு வேகத்தை நெருக்கினர். தொடர்ந்து மொர்டாஸா, ஷகிப் அல் ஹசன் இருவரும் ஆட்டமிழக்க, சவும்யா சர்க்கார், அணியை வெற்றி பெறச் செய்யும் முனைப்பில் ஆடிவந்தார்.

அவரும் 18-வது ஓவரில் நெஹ்ராவின் பந்துவீச்சில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதுவரை அதிக ரன்கள் தந்துவந்த பும்ரா, தனது கடைசி ஓவரில் 6 ரன்களை மட்டுமே கொடுக்க, வங்கதேச அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாயிருந்தது.

ஜடேஜா, அஷ்வின் இருவரும் 4 ஓவர்கள் வீசி முறையே 22 ரன்களும், 20 ரன்களும் தந்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.