அரசியல் கட்சிகளை ஆட்டிப்படைக்கும் வாக்காளர்கள்!

Filed under: அரசியல்,இந்தியா |

75567-050-6BF40AC2ஹம்பா ஹஸ்தா டாட்மா மடிபா அப்படியென்றால் என்ன என்று திகைக்கிறீர்களா? இது தென் ஆப்ரிக்க மூல மொழியில், மறைந்த நெல்சன் மண்டேலாவை அடக்கம் செய்யும் போது, மக்கள் கூறிய கடைசி வாசகம். நீங்கள் சென்று நல்லபடியாக திரும்பி வாருங்கள் என்பது இதன் தமிழாக்கம். நாமும் அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறோம்.
இந்திய அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத் தன்மையைக் காட்டத்தொடங்கிவிட்டார்கள். டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு டெல்லியில் ஆட்சி அமைக்க, இந்தியக் கட்சிகள் தங்கள் வறட்டு கௌரவத்தின் மூலம் ஜனநாயகப் பண்புகளை புதைத்துவிட்டார்கள். நடிகர் அர்ஜூன் நடித்த ‘முதல்வன்’ படத்தில் ‘ஒருநாள் முதல்வர்’ ஆட்சிக்கு ஆதரவளித்த மக்கள் தற்போது ஒருநாள்கூட ஆட்சி அமைக்காத அரசியல் கட்சிகளைக் கண்டு குமுறுகிறார்கள். மக்கள் மனதில் இடம்பிடித்த ஆம் ஆத்மி கட்சிகூட தற்போது தமிழக விஜயகாந்த் கட்சிபோல நடந்து கொள்கிறதாம். ஊழலற்ற ஆட்சி அமைத்து டெல்லி மாநகரை சிங்காரமாக்கி, மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவோம் என்ற உறுதி கொடுத்த கட்சி, தற்போது கலங்கி நிற்கிறது. அதேபோல் சாதி அரசியலில் தற்போது பிரச்னையில் இருக்கும் கர்நாடக சித்தராமையா, கேரள ஓமன்சாண்டி, ஆந்திர கிரண்குமார் ரெட்டி ஆகியோரும் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது! வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஜாக்பாட் அடிக்கப்போவது தமிழக முதல்வர்தான் என்ற கருத்து உள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலில் தனித்தனியாக உழைத்து அ.தி.மு.க. தலைவி பெற்ற வாக்குகள் இந்திய அரசியல் வல்லுநர்களை வியக்கவைத்துள்ளது. எப்படியும் அ.தி.மு.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும். மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த கவுண்டர்கள் தெற்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தேவர்கள், அந்தணர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அ.தி.மு.க.விற்கு கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. மேலும் பா.ஜ.க.வின் இந்து முன்னணி, பஜ்ரங்தள் அமைப்பினர், சிவசேனா ஆகியவற்றின் தமிழக கட்சியின் பெரும் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. பக்கம் ஆதரவு உண்டாம்.
வட மாவட்டங்களிலுள்ள வன்னியர்கள், முதலியார்கள், தெலுங்கு பேசுபவர்கள், ஆதிதிராவிடர்கள் தங்களுக்குள் பிரிந்து அ.தி.மு.க.விற்கு ஒரு பங்கை நிச்சயம் அளிக்கப்போவது உண்மை என்ற கருத்து உள்ளது. காரணம் அரசியல் நிர்வாகம் தெரியாத குற்றம். அரசியல் என்பது வேறு அரசியல் நிர்வாகம் என்பது வேறு. 2 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட அப்போதைய புரட்சித்தலைவி தற்போது 141 சட்டசபை உறுப்பினர்களை பெற்றுள்ளதை வடஇந்தியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மொத்தத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே உடையலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களின் முடிவு காங்கிரஸ் தலைவியை அதிகம் கலக்கி உள்ளது. தன்னுடைய மகனின் அரசியல் விலைபோகாத காரணங்களை ஆராய தொடங்கிவிட்டாராம். அதன் முடிவு மந்திரி சபை மாற்றம் நிகழக்கூடும் என்கிறார்கள். கட்சி அடியோடு மாற்றி அமைக்கப்படும். பொதுச் செயலாளர்கள் பலர் நீக்கப்பட உள்ளனர். சாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய அரசியல் நிலையை சற்று மாற்றி அமைத்தது டெல்லி மாநில முடிவுகள்.
ஆனால் புது அரசு அமைக்காமல் டெல்லி மக்களை பழிவாங்கும் அரசியல் கட்சிகளை கண்ட மக்கள் வெறுப்புற்று பழையபடி சாதி அரசியலை ஊக்குவிக்கிறார்கள். இதில் தென் மாவட்டங்களிலுள்ள நாடார்கள் தங்களுக்குள் பிரிந்து அ.தி.மு.க.விற்கு பெரும்பான்மையாக ஆதரவு அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சாதிகளின் ஆதரவில் முதன்மை பெற்ற தமிழக முதல்வர் அரசியல் கட்சிகளிடையேயும் முதல்வராக உள்ளார். காரணம் பா.ஜ.க. 2 லட்சம் ஓட்டில் தோற்பதற்கு பதிலாக 75000 ஓட்டுக்களில் தோற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதாம். தி.மு.க. பாவம் கேட்பாரற்று கிடக்கிறதாம். தி.மு.க. தலைவரின் அரசியல் கணிப்புகள், நடப்புகள் அவருடைய முடிவுக்கு ரிவிட் அடிக்கத் தொடங்கி உள்ளதாக தி.மு.க.வினர் வருந்துகிறார்கள். தமிழக காங்கிரஸ் தற்போது தவழத் தொடங்கி உள்ளதாக கிண்டலடிக்கிறார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் கூறியபடி எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. அந்த இளைஞர்கள் சமுதாயம் புரட்சித்தலைவியின் கையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.