அ.தி.மு.க.வின் எழுச்சியை தடுக்கும் கருப்பு ஆடுகள்!

Filed under: அரசியல்,இந்தியா |

p_5தமிழக அரசியல் கட்சிகள் வடஇந்தியாவில் எழுச்சி பெறுவது அல்லது குறைந்தது கால்வைக்க முடியுமா என்ற அலசல் தலைநகரில் தற்போது நடக்கிறது. இந்திய தலைநகரில் தென்இந்தியர்கள், கிழக்கு இந்தியர்கள் கலந்து சுமார் 8 சட்டசபை தொகுதிகளையும், இரு பாராளுமன்றத் தொகுதிகளையும் முடிவு செய்கிறார்கள். இவர்களிடையே தமிழக கட்சிகளில் அ.தி.மு.க.வின் பலம் உயர்ந்து இருந்ததாக சில ஆண்டுகளாகக் கூறப்பட்டது. அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் டெல்லியில் அ.தி.மு.க.வின் எழுச்சிக்கு தனி நிதி ஒதுக்கி, வளர முயற்சி செய்தாராம். அப்போது வெடித்ததுதான் டெல்லி -அ.தி.மு.க. உட்பகை என்கிறார்கள்.
தமிழக முதல்வர் தங்களிடம் நேரிடையாக உரையாடி, டெல்லி அரசியல் நிலவரங்களை தினமும் கேட்டு பெறுவதாக சிலர் மார்தட்டி பிரச்சாரம் செய்தார்களாம். இவர்களுடைய அ.தி.மு.க. நெருக்கத்தைக் கண்ட டெல்லி வாழ் தமிழர்கள் மற்றும் அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று தயங்க ஆரம்பித்துள்ளனர். டெல்லியில் அ.தி.மு.க.வின் எழுச்சி தங்களின் செல்வாக்கை கவிழ்த்துவிடும் என்று பயந்த சுயநலவாதிகள், அ.தி.மு.க. தலைமைக்கு பல்வேறுபட்ட கருத்துக்களை கூறி அ.தி.மு.க.வை வளரவிடாமல் செய்துவிட்டதாக டெல்லி அ.தி.மு.க. தொண்டர்கள் குமுறுகிறார்கள்.
மேலும் அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் டெல்லியில் தங்குவதில்லை என்ற உணர்வும் உள்ளதாம். இதனால் தலைநகரில் அ.தி.மு.க. வளர்ச்சிக்கு பாடுபடும் வடஇந்தியர்கள் வெறுப்புடன் இருக்கிறார்களாம். அ.தி.மு.க. தலைவியின் புகழ் டெல்லி மாநகரில் அதிகம் கவர்ந்துள்ளதை பாராளுமன்ற மைய ஹாலில் உறுப்பினர்கள் விவாதிப்பதை கேட்க முடிகிறது. தமிழகத்தில் வளரமுடியாத தே.மு.தி.க. துணிந்து டெல்லியில் போட்டியிடுவது வியப்புக்குரியது. காரணம் தென்இந்திய வாக்குகளை பிரிக்க காங்கிரஸ் செய்த அரசியல் விளையாட்டு இது என்கிறார்கள். ஆங்கிலம், தமிழ் சரளமாக தெரிந்த அ.தி.மு.க. உறுப்பினர்களை, தலைவர்களை தமிழக முதல்வர் டெல்லியில் பயன்படுத்த தயங்குவதாகக் கூறப்படுகிறதாம்.
மேற்கு வங்க அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவிக்கு ஆதரவாக டெல்லியில் களம் இறங்குகிறார்கள். தமிழக முதல்வருக்கு ஆதரவாக மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தயாராக இருப்பது கண்கூடான உண்மை. இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, தலைமைக்கு நாடகம் போடும் சுயநலவாதிகளால் அ.தி.மு.க. டெல்லியில் எழுச்சிபெற முடியவில்லை என்ற கருத்து உலவுகிறது. தமிழக முதல்வரின் அருகே நெருங்கவிடாத ஒரு சுயநலக்கூட்டம், அ.தி.மு.க.வின் அரசியல் எழுச்சியை அதிகம் கட்டுப்படுத்துவதாக தலைநகர பத்திரிகையாளர்கள் கூறுகிறார்களாம்.
உதாரணமாக தமிழக திட்டங்களுக்கு (மற்ற மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுப்பதுபோல்) மத்திய அரசு கொடுப்பதில்லை என்ற கருத்து தமிழகத்தில் உலவுகிறது. தமிழக எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், மத்திய அரசும், காங்கிரஸ் தலைவர்களும் தமிழக முதல்வரின் எழுச்சியை கட்டுப்படுத்த தொடங்கிவிட்டார்களாம்.
தமிழக திட்டங்களுக்கு அளிக்கவேண்டிய நிதிக்கு மத்திய அரசு அதிகாரிகள் புரட்சித்தலைவிக்கு ஆதரவாக பரிந்துரை செய்து அனுப்பியுள்ளார்கள். ஆனால், அந்த நிதிகள் முழுமையாக, காலத்துடன் பட்டுவாடா செய்ய மத்திய அமைச்சர்கள் தயங்குகிறார்களாம். இந்த பிரச்னையை தமிழக முதல்வருக்கு தெரிவிக்க மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தவிப்பது கண்கூடான உண்மை.
மேலும் தமிழக முதல்வருக்கு நெருங்கிய கூட்டம் ஒன்று, டெல்லி சுயநலவாதிகளுக்கு அடிமை ஆனதின் விளைவு தான் இது என்று கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக முதல்வரின் பல திட்டங்கள் மத்திய அரசு ஊழியர்களையும், பல மாநில மக்களையும் கவர்ந்துள்ளது. அதை சரியாக பிரச்சாரம் செய்ய தடுப்பது ஒரு கூட்டம் என்றும், பிரச்சாரம் செய்ய திணறுவதாகவும் ஒரு சாரார் பாராளுமன்றத்தில் விவாதிக்கின்றனர். இதை தவிர்க்க டெல்லியில் அ.தி.மு.க.விற்கு தனிக்குழு அமைக்கப்பட்டு, அதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள், வழக்கறிஞர்கள் இடம்பெற வேண்டும் என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உண்மையில் தமிழக முதல்வர் பாரத பிரதமராக எழும் அரசியல் நிலையில் இருந்தாலும் எதிர்ப்பவர்கள் செய்யும் அரசியல் சூழ்ச்சியில் டெல்லி அ.தி.மு.க. சுயநலவாதிகள் சிக்கிக்கொண்டு, அ.தி.மு.க. எழுச்சிக்கு தடைபோடுவதாக தலைநகர தமிழ் மக்கள் குமுறுகிறார்களாம்.
தமிழக திட்டங்களுக்கான நிதி உடனடியாக விரைவுபடுத்த தமிழ்நாடு இல்லத்தில் முன்னாள் ஆட்சியாளர்களின் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தலைநகர மத்திய அரசு ஊழியர்கள் வேண்டுகிறார்கள்.