இந்தியாவிற்கு எதிரான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது நியூசிலாந்து

Filed under: விளையாட்டு |

ஹாமில்டன்,

2fb94bbe-3d87-49db-8a91-3bfc54311ab8_459843001_10இந்தியா அணிக்கு எதிரான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 24 ரன் வித்தியாசத்திலும், 2–வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 315 ரன்கள் குவித்த திரில்லான ஆட்டம் கடைசி பந்தில் டையில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 278 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு 279 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. ஆட்ட முடிவில் டோனி 79 ரன்னுடனும், ஜடேஜா 62 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.  கோக்லி 2 ரன்களிலும், ரெகானே 3 ரன்களிலும், ராயுடு 37 ரன்களிலும், ரோகித் சர்மா 79 ரன்களிலும், அஸ்வின் 5 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

இதனை அடுத்து பேட்டிங் செய்து விளையாடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 280 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி வீரர்கள் மெக்கல்லம் 49 ரன்களிலும்,  டெய்லர் 112 ரன்களிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். கப்தில் 35 ரன்களிலும், ரைடர் 19 ரன்களிலும், வில்லியம்சன் 60 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.