உலகக் கோப்பை: இரட்டை சதமடித்து கிறிஸ் கெய்ல் சாதனை !

Filed under: விளையாட்டு |

gaill_2321071fஉலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் நிகழ்த்தினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கான்பெர்ராவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

துவக்க வீரர் ஸ்மித் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜோடி சேர்ந்த சாமுவேல்ஸ், கெய்ல் ஜோடி பொறுப்பாக ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர்.

சதமடிக்கும் வரை நிதானித்து ஆடிய கிறிஸ் கெய்ல், அதற்குப் பின் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.

சதத்துக்குப் பிந்தைய அடுத்த 33 பந்துகளில் இரட்டைச் சதத்தை எட்டினார். இந்த இரட்டைச் சதத்தில் 9 பவுண்டரிகளும், 16 சிக்ஸர்களும் அடங்கும். 46-வது ஓவரிலேயே இரட்டைச் சதம் அடித்தாலும், பின்னர் ஆடுவதற்கான சரியான வாய்ப்பு அமையாததால் கெய்ல் மேற்கொண்டு 15 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

இன்னிங்ஸின் கடைசி பந்தில், 215 ரன்கள் (147 பந்துகள், 10 பவுண்டரி, 16 சிகஸர்) எடுத்திருந்த நிலையில், கெய்ல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஆடிவந்த சாமுவேல்ஸ் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 372 ரன்களைக் குவித்தது.

இதனால், ஜிம்பாம்வே அணிக்கு 373 என்ற கடினமான வெற்றி இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்தது.

கெய்ல் முறியடித்த சாதனைகள்

* உலகக் கோப்பை போட்டிகளில் அடிக்கப்படும் முதல் இரட்டை சதம் இது. உலகக் கோப்பையில் ஒரு வீரர் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர், அதிவேகமாக அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் என்ற சாதனைகளையும் கெய்ல் படைத்தார்.

டிராவிட் – சச்சின் சாதனை முறியிடிப்பு:

* கெய்ல், சாமுவேல்ஸ் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் குவித்த 372 ரன்கள், ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன் இந்தியாவின் டிராவிட் – டெண்டுல்கர் இணைந்து எடுத்த 331 ரன்களே, அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையாக இருந்தது.

* சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச சிக்ஸர்கள் (16 சிக்ஸர்கள்) என்ற ரோஹித் சர்மா மற்றும் ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை கெய்ல் சமன் செய்தார். மேலும், இந்தியர் அல்லாத ஒருவர் அடித்துள்ள முதல் இரட்டை சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்திய வீரர்கள், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் (இரண்டு முறை) ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

* அதேபோல, ஒருநாள் போட்டிகளில், ரோஹித் சர்மா (264), சேவாக் (219) முதல் இரண்டு இடங்களில் இருக்க, கெய்ல் (215) மூன்றாம் இடத்தில் உள்ளார்.