எதற்கும் தயார் நிலையில் தேசிய கட்சிகள்!

Filed under: அரசியல்,இந்தியா |

15TH_CITY_PARLIAME_1144100fபாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவர ஆரம்பித்துள்ளது. இந்திய கட்சிகள் கூட்டணிகளை தேட ஆரம்பித்து உள்ளன. காங்கிரஸ் தன் கைவசம் உள்ள கூட்டணிகளை இழக்காமல் காக்க நினைக்க பா.ஜ.க. மோடியின் மீது நம்பிக்கை வைத்து அதிக கூட்டணிகளை தேடுவதை தவிர்ப்பதாகக் கூறுகிறார்கள்.
மதவாதம், மதசார்பற்றத்தன்மை என்ற போர்வையில் இரு தேசிய கட்சிகளும் 3வது அணியை சேர்ந்த யார் வந்தாலும் பிரதமராக்க தயாராக திட்டம் தீட்டி உள்ளார்களாம். தற்போது உள்ள ஆட்சியை கைவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆட்சியைப்பிடிக்க காங்கிரஸ் கடும் முயற்சி எடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். எப்பாடுபட்டாகிலும் மத்திய ஆட்சியையோ, பிரதமரையோ தன் கையில் வைக்க, காங்கிரஸ் எந்த திட்டத்திற்கும் சம்மதம் என்கிறார்கள்.
அதேபோல் பா.ஜ.க. அடுத்த மத்திய ஆட்சியின் லகான் தன் கையில் வைத்திருக்க, எந்த திட்டத்திற்கும் ரெடியாக உள்ளதாம். காரணம் அடுத்த மத்திய ஆட்சி 3வது அணிகளை சேர்ந்த மாநில கட்சிகள் அதிக வெற்றியை பெறும் என்று உறுதிபட கூறுகிறார்கள். காங்கிரசின் இளம் புயல் ராகுல்காந்தி சுமார் 180 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்ந்து எடுத்துவிட்டாராம். பா.ஜ.க.வோ சுமார் 100 தொகுதிகளில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
இந்த தேர்தலில் தலையில் கை வைத்து அழப்போகிறவர்களாக நிதிஷ்குமார், தமிழக பா.ஜ.க., தமிழக காங்கிரஸ், டெல்லி ஆம் ஆத்மி கட்சி, கேரள காங்கிரஸ் கட்சிகளை குறிப்பிடுகிறார்கள். தமிழக கட்சிகள். அ.தி.மு.க.வை தவிர அனைத்தும் பித்து பிடித்து போயுள்ளன. மக்களிடம் செல்வாக்கே இல்லாத இவர்கள் 40 தொகுதிகளும் நமக்கே என்று மார்தட்டுவதை கீழ்கண்ட ஆய்வுகளில் காணலாம்.
தமிழகம் தற்போது அரசியலில் காமெடி செய்து கொண்டு உள்ளது. 5 சதவிகிதம் ஆதரவு உள்ள பா.ஜ.க., 3 சதவீதம் ஆதரவுகொண்ட பா.ம.க., 3 சதவீத ஆதரவு கொண்ட ம.தி.மு.க. 7 சதவீத ஆதரவுபெற்ற தே.மு.தி.க. 18 சதவீதம் ஆதரவு கொண்ட தி.மு.க., 9 சதவீத ஆதரவு பெற்ற காங்கிரஸ், 5 சதவீத ஆதரவை கொண்ட உதிரி கட்சிகள் தற்போது ஒருவருக்கு ஒருவர் இணைய முடியாமல் தவிக்கிறார்களாம்.
பா.ஜ.க. கூட்டணி மோடியை காட்டி அதிகபட்சம் 18 சதவீதம் தான் ஆதரவு பெறமுடியும் என்கிறார்கள். காங்கிரஸ், தி.மு.க., தே.மு.தி.க. இணைந்தாலும் 34 சதவீதம் பெறுவதாக வைத்துக்கொள்ளலாம். இதில் சுமார் 14 சதவீத ஆதரவு அ.தி.மு.க.விற்கு சென்று விடும் அபாயம் உள்ளதாம். தி.மு.க.வில் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி பிரிவுகள் வேட்பாளர்களை நிறுத்தும் போது, தாமாகவே எதிர்ப்பை தெரிவித்து அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற கணிப்பு உள்ளது.
விஜயகாந்த் கட்சி ஏற்கனவே பிளந்து உள்ளது. காங்கிரஸ் பல பிரிவுகளை கொண்டதாக கூறுகிறார்கள். வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, இளங்கோவன், தங்கபாலு, மாணிக்கதாகூர் கோஷ்டிகள். இதைத்தவிர ராகுல் காந்தி ஆதரவாளர்கள் தனியே ஒரு பிரிவாக உள்ளார்களாம். காங்கிரசில் உள்ள பல பிரிவுகள் தி.மு.க. எதிர்ப்பு கொள்கையில் ஒன்றாக உள்ளார்களாம். பா.ஜ.க.வில் இல.கணேசன் ஆதரவாளர்கள் தி.மு.க. பக்கம் சாயலாம் என்ற வதந்தி உலவுகிறது. ஆகமொத்தம் தங்கள் கட்சிகளை சரிவர கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியாத தமிழக கட்சிகள், ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை வீழ்த்த முடியுமா என்ற விவாதம் தலைநகரில் நடக்கிறது.