நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை: விஜய் மல்லையா !

Filed under: இந்தியா |

Vijay-Mallya-Net-Worthநான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன் என தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் (@TheVijayMallya) மேலும் கூறியிருப்பதாவது:

“நான் ஒரு சர்வதேச தொழிலதிபர். தொழில் நிமித்தமாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. நான் பயந்தவனும் இல்லை.

இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக, நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன். நமது நாட்டின் நீதித்துறை வலுவானது, போற்றுதற்குரியது. நீதிக்கு நான் கட்டுப்படுகிறேன், ஆனால், ஊடகங்கள் கற்பிக்கும் நியாய அநியாய வாதங்களுக்கு கட்டுப்பட்டவன் அல்ல.

நான் என் சொத்து விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன. எனது சொத்து விவரங்கள் என்னவென்பது எனக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்குத் தெரியும். ஏன், நாடாளுமன்றத்திலும் என் சொத்து விவரங்களை தெரிவித்துள்ளேன்.

இப்போது என் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஊடக முதலாளிகள் கடந்த காலங்களில் என்னால் அடைந்த பலன்களை மறந்துவிட வேண்டாம். அவற்றையெல்லாம் நான் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன். இப்போது டி.ஆர்.பி.க்காக ஊடகங்கள் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன.

ஊடகங்கள் சில விவகாரங்களை கையிலெடுத்துக் கொண்டால் அவற்றை பெரிதாக்கி, நெருப்பை வளர்த்து அதில் உண்மையை எரித்து சாம்பலாக்கி விடுகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மல்லையா, எங்கிருந்து இந்த ட்வீட்களை அனுப்பியிருக்கிறார் என்பதை தெரிவிக்காவிட்டாலும் அவர் லண்டனில் வடக்கு பகுதியில் இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் தொலைக்காட்சி மீது சரமாரி விமர்சனம்:

டைம்ஸ் நவ் தனியார் தொலைக்காட்சியை சரமாரியாக விமர்சித்துள்ள தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மல்லையா, “டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலின் ஆசிரியர், அவதூறு பரப்பி, பரபரப்புக்காக பொய்யான வதந்திகளை பரப்புவதற்காக கைதி உடையணிந்து, சிறைச்சாலை உணவை உண்ண வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மல்லையாவால் முடங்கிய நாடாளுமன்றம்:

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியேறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மல்லையா விவகாரம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

“ரொட்டி திருடினால் அவரை அடித்து உதைத்து சிறையில் தள்ளுகிறோம். ஒரு பெரிய தொழிலதிபர் ரூ.9,000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார், அவர் முதல் வகுப்பில் தப்பிச் செல்ல நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?” என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

விஜய் மல்லையா விவகாரத்தால் எழுந்த விவாதத்துக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘சாத்தியமாகக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில்தான், விஜய் மல்லையா “நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன்” என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.