நியூஸி. பந்துவீச்சில் 151 ரன்களில் தவித்துச் சுருண்டது ஆஸி !

Filed under: உலகம்,விளையாட்டு |

finch_2325643fநியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 152 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் நியூஸிலாந்து களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருந்தன. 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற நிலையில் சவுத்தீ வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை ஃபின்ச் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அடுத்து சற்று நிதானித்த ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் சேர்ப்பு வேகத்தை குறைத்துக் கொண்டனர். ஆனால் 13-வது ஓவரின் கடைசி பந்திலும், அடுத்த ஓவரின் முதல் பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா மீளவே இல்லை.

தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ 32.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா எடுத்தது.

நியூஸிலாந்து வேகப் பந்துவீச்சாளர் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி நிலை குலைந்தது. சவுத்தி, விட்டோரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹாடின் 43 ரன்களை சேர்த்தார். வார்னர் 34 ரன்களும், வாட்சன் 23 ரன்களும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.