முதல் நாக்அவுட் வெற்றியை ருசித்தது தென் ஆப்ரிக்கா: இலங்கையை வீட்டுக்கு அனுப்பியது!

Filed under: உலகம்,விளையாட்டு |

south_africa_2345143gபலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிட்னியில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் காலிறுதி ஆட்டம் எந்த ஒரு தாக்கத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தாமல் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் நாக்-அவுட் வெற்றியாக அமைந்தது.

புள்ளி விவரங்களின்படி 270 ரன்களை இலங்கை எடுத்தால் தென் ஆப்பிரிக்கா இலக்கைத் துரத்த முடியாது போகும் என்று கணிக்கப்பட்டது. போட்டிக்கு முன் என்னென்னவோ கணிப்புகள், பார்வைகள் என்று சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், தென் ஆப்பிரிக்கா தனது தொழில்பூர்வ ஆட்டத்திறமையினால் இலங்கையை ஓர் ஆட்டத்தில் ஒன்றுமேயில்லாத ஒரு அசோசியேட் அணி போல தோற்றமளிக்கச் செய்து வென்றுள்ளது.

ஆனால், இதனையும் எச்சரிக்கையுடனேயே நாம் கூற வேண்டும், அசோசியேட் அணிகள் சிறப்பாக ஆடி, சவால் அளித்த உலகக் கோப்பை போட்டி இதுதான். ஆகவே அசோசியேட் அணியுடன் இலங்கையை இந்த நிலையில் ஒப்பிட்டால் அது சரியாக இருக்காது என்றும் தோன்றுகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ததைத் தவிர இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் வேறு ஒன்றையும் சரியாகச் செய்ததாகத் தெரியவில்லை. இதனாலேயே உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இலங்கை ஆட்டத்தை மனரீதியாக, உணர்வு ரீதியாக, தர்க்க ரீதியாக இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

இலங்கை கேப்டன் செய்த தவறுகள்:

முதலில் ‘நெருக்கடி தென் ஆப்பிரிக்காவுக்குத்தான்’ என்று டாஸ் போடும்போது மேத்யூஸ் கூறியிருக்கக் கூடாது. மேலும் முதல் போட்டியை ஆடும் தாரிந்து குஷால் என்ற ஆஃப் ஸ்பின்னரை ‘முரளிதரன் டூப்ளிகேட்’ என்றும் புதிர் ஸ்பின்னர் என்றும் வர்ணித்து வார்த்தை விளையாட்டுகளை தென் ஆப்பிரிக்க அணியினரிடத்தில் கொண்டு சென்றார்.

பொதுவாக டாஸ் போடும்போது எந்த ஒரு கேப்டனும் இப்படி கூற மாட்டார்கள். ஆட்டத்துக்கு முதல் நாள் செய்தியாளர்கள் சந்திப்பில், அதுவும் தன் நாட்டு பத்திரிகையாளர்கள் குழுமியுள்ள தருணத்தில் எதிரணியினருக்கு எதிராக 4 வார்த்தைகளைக் கூறுவது கேப்டன்களின் வழக்கம். ஆனால் மேத்யூஸோ டாஸ் போடும் போது இவ்வாறெல்லாம் கூறினார். ஆனால் முடிவு… கடைசியில் நகைச்சுவையாகப் போய்விட்டது.

புதிராகப் பேசிய மேத்யூஸ் மேலும் சில புதிரான முடிவுகள எடுத்தார். இந்த உலகக் கோப்பையில் தொடக்க வீரராகக் களமிறங்கிய லாஹிரு திரிமானி 261 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் அவருக்குப் பதிலாக பலமான தென் ஆப்பிரிக்க பந்து வீச்சுக்கு எதிராக குஷால் பெரேரா என்ற இடது கை வீரரை களமிறக்கினார்.

அவர் ஏதோ இலங்கை கிளப் அணி பவுலர்கள் வீசுகிறார்கள் என்பது போல் முதிர்ச்சியற்ற அனாயாச மட்டைச் சுழற்றலில் ஈடுபட்டார். கைல் அபாட் அவரை ஒரு சாதாரண ஸ்விங் பந்தில் வீழ்த்தினார். குவிண்டன் டி காக் அருமையாக அந்தக் கேட்சைப் பிடித்தார். மேத்யூசின் முதல் புதிர் முடிவு தோல்வியில் முடிந்தது.

இப்போது தில்ஷன், சங்கக்காரா இணைந்தனர். சரி. ஆட்டம் இனிதான் தென் ஆப்பிரிக்காவுக்கு சங்கடம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தில்ஷன் ஸ்டெய்ன் வீசிய சற்றே உயரம் கூடுதலாக வந்த பந்தை நேராக 2-வது ஸ்லிப்பிற்கு டு பிளெஸ்ஸிஸ் கையில் கொடுத்தார். சற்றும் எதிர்பார்க்க முடியாத ஷாட். டேல் ஸ்டெய்ன் தனது விசித்திரமான செய்கையில் அந்த விக்கெட்டைக் கொண்டாடினார்.

முதல் 13 ஓவர்களில் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா பக்கம் சூடு பிடித்தது. இரண்டு அருமையான கேட்ச்கள், நல்ல கட்டுக்கோப்பான, அளவான ஸ்விங் பவுலிங், நல்ல பீல்டிங். 4 மெய்டன் ஓவர்கள்.

சங்கக்காராவின் புரியாத புதிர் இன்னிங்ஸ்:

இந்த உலகக் கோப்பையில் 4 சதங்களை அடித்து சாதனை புரிந்தவர். இவர்தான் இன்று இலங்கையின் துருப்புச் சீட்டு என்றெல்லாம் கணிப்புகள் இருந்தன. ஆனால் சங்கக்காராவுக்கு இன்று தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு மற்றும் கள அமைப்பு ஆணியறைந்தது என்றே கூற வேண்டும். அவர் முதல் ரன்னை எடுக்க 16 பந்துகள் எடுத்துக் கொண்டார். 2-வது ரன்னை எடுக்க 27 பந்துகளையும், 6 ரன்களை எடுக்க 42 பந்துகளையும் விழுங்கியதோடு 90 பந்துகளில் 34 ரன்கள் என்று தடுமாறினார்.

அவர் நினைத்தது என்னவெனில் யாராவது ஒருவர் நின்று ஆடினால், தான் கடைசி வரை நின்று ஓரளவுக்கு இலக்கை 250 ரன்களுக்காவது கொண்டு செல்ல முடியும் என்று நினைத்தார். அவர் நினைத்ததில் தவறில்லை. அங்குதான் இவருக்கு சாதுரியம் போதாது என்று தோன்றுகிறது.

இன்று சச்சின், லாரா ஆகியோருடன் ஒப்பிடப்படும் சங்கக்காரா எங்கு இவர்களை விடவும் சற்று பின் தங்கியிருக்கிறார் என்பதற்கு நிறைய உதாரணங்களைக் கூற முடியும். ஒரு முறை சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி லீக் போட்டியில் அப்போதைய ஜிம்பாப்வே (அந்த ஜிம்பாப்வே அணி இந்திய அணியை விடவும் பலமானது) அணியை குறிப்பிட்ட ஓவர்களில் வீழ்த்தினால் மட்டுமே இறுதிக்கு முன்னேற முடியும். பெனோனியில் நடைபெற்ற அந்த ஆட்டம் இன்னமும் நினைவிருக்கிறது. 240 ரன்களை 40 ஓவர்களில் எடுக்க வேண்டிய நிலை. சச்சின் தனி மனிதராக ஜிம்பாப்வேயின் எடோ பிராண்டஸ், ஹீத் ஸ்ட்ரீக் ஆகியோரை அடித்து நொறுக்கி சதம் கண்டு இலக்கை எட்டி இறுதிக்கு இந்திய அணியை முன்னேற வைத்தார்.

இப்படி இன்னும் நிறைய இன்னிங்ஸ்களை நாம் சச்சினுக்குக் கூற முடியும். 1998ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிளென் மெக்ராவை சச்சின் விளாசியது பெரிய திருப்பு முனை ஏற்படுத்தியது. அதே போல்தான் 1996 உலகக்கோப்பையிலும் 2 விக்கெட்டுகள் போன பிறகு மெக்ராவை ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசி சச்சின் ஆட்டத்தை திருப்பினார். லாரா 1992 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ், 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றிய அபார சதம் என்று பட்டியலிட முடியும்.

சங்கக்காரா இன்று தென் ஆப்பிரிக்கா கொடுத்த நெருக்கடியை இவர்கள் பாணியில் தாக்குதல் ஆட்டத்தில் முறியடித்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்தான் இந்தத் தொடரில் நல்ல ஃபார்மில் உள்ளார். அவர் தென் ஆப்பிரிக்க ஸ்பின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியிருந்தால், அதாவது ஒரு 5 ஓவர்கள் அவர் இவ்வாறு ஆடியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். மாறாக அவர் நங்கூரம் பாய்ச்சி நின்று ஆடும் ஆட்டத்தைத் தேர்வு செய்தார். எதிர்முனையில் விக்கெட்டுகள் சரியும் போது கிரீசில் நிற்கும் இவர் பொறுப்பை தன்வசம் எடுத்துக் கொண்டு தாக்குதலை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

எல்லாம் முடிந்த பிறகு கடைசியில் அடித்து ஆட முயன்று 96 பந்துகளில் 45 ரன்களில் மோர்னி மோர்கெல் பந்தை தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 127-வது ரன்னில் விழுந்த 9-வது விக்கெட்டாக சங்கக்காராவின் கடைசி போட்டி முடிவுக்கு வந்தது.

இங்குதான் நாம் சச்சின், லாரா போன்ற ‘மேதை’ வீரர்களுக்கும், சங்கக்காரா போன்ற ‘சிறந்த’ வீரர்களுக்கும் உள்ள இடைவெளியை குறிப்பிடுவது அவசியம். தாக்குதலை எதிரணியினரிடத்தில் எடுத்துச் செல்லுதல் என்ற ஒன்று எப்போதும் உண்டு. எது எப்படியிருந்தாலும் இலங்கையின் தலைசிறந்த வீரராக உருவெடுத்த சங்கக்காரா விளையாடும் கடைசி ஒருநாள் போட்டி இது. இலங்கை கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு அபரிமிதமானது. உலகக் கிரிக்கெட்டுக்கும் அவரது ஆல் ரவுண்ட் திறமை (விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாக) செய்த பங்களிப்பு மறக்க முடியாதது, மறுக்க முடியாதது.

மற்றொரு ஓய்வு பெறப்போகும் வீரரான ஜெயவர்தனே, இம்ரான் தாஹிரின் ‘செல்லப்பிள்ளையாக’ இருந்து வந்திருக்கிறார். இன்று அவர் தாஹிரிடம் அவுட் ஆனது 4 இன்னிங்ஸ்களில் 4-வது முறை. சற்றே விரைவாக வந்த பந்தை மிட்விக்கெட்டில் புல் ஆட முயன்று அருகிலேயே கேட்ச் ஆனது.

திரிமானி மட்டும் வந்தது முதல் அடித்து ஆடிக்கொண்டிருந்தார். தொடக்கத்தில் களமிறக்காததன் கோபம் தெரிந்தது. 48 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிரின் முதல் விக்கெட்டாக அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இம்ரான் தாஹிர் மீண்டும் அபார பந்துவீச்சு:

இந்த உலகக்கோப்பையில் இம்ரான் தாஹிர் மீது தென் ஆப்பிரிக்கா கேப்டன் வைத்த அபரிதமான நம்பிக்கை இன்றும் வீண் போகவில்லை. அவர் 8.2 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். திரிமானி, ஜெயவர்தனே, பெரேரா, கடைசியில் மலிங்கா ஆகியோரை வீழ்த்தினார்.

சங்கக்காராவுக்கு இவர் இடம் கொடுக்காமல் வீசி அசத்தினார். கூக்ளியையும் லெக்ஸ்பின்னையும் மாறி மாறி வீசி குழப்பத்தை ஏற்படுத்தினார். தான் வீசிய 50 பந்துகளில் 2 பவுண்டரிகளை மட்டுமே அவர் கொடுத்தார்.

டுமினியிடம் அனாவசியமாக மேத்யூஸ் 19 ரன்களில் வீழ்ந்தார். அது 33-வது ஓவரின் கடைசி பந்து பிறகு, 35-வது ஓவரின் முதல் 2 பந்துகளில் குலசேகரா, குஷால் ஆகியோரை வீழ்த்தி ஹேட்ரிக் சாதனை நிகழ்த்தினார் டுமினி. அவர் 9 ஓவர்களில் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.

டுமினியை அடிக்காமல் விட்டதே சங்கக்காரா இன்று செய்த மிகப்பெரிய தவறு. அன்று பாகிஸ்தானின் சர்பராஸ் அகமட் சரியாக டுமினியைத் தாக்கினார் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. இன்று அதனைச் சங்கக்காரா செய்திருக்க வேண்டும். 37.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு ஒரு அணி என்ன செய்ய முடியும்?

ஃபார்மில் இல்லாத குவிண்டன் டி காக்கை ஃபார்முக்குக் கொண்டு வந்ததுதான் இலங்கை அணியின் இன்றைய பந்துவீச்சு சாதனையாக அமைந்தது.

தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியது ஒருவிதத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், இலங்கை சவால் அளிக்காமல் சரணடைந்தது மிகப்பெரிய ஏமாற்றமே.

முக்கியப் போட்டியில் கோட்டைவிடும் அணி என்’ற ஓர் அடையாளத்தை முறியடித்துள்ள தென் ஆப்பிரிக்கா இனி ஓர் அபாயகரமான அணியே என்று நிச்சயம் கூற முடியும்.