130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி காட்டியது இந்தியா !

Filed under: இந்தியா,உலகம்,விளையாட்டு |

India-vs-South-Africa-World-Cup-Cricket-Matchமெல்பர்ன்:  உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில்  130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்றை இந்திய கிரிக்கெட் அணி படைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலக கோப்பை போட்டிகளில் பரம எதிரி பாகிஸ்தானைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவையும்வீழ்த்தியுள்ளதால்  உலகக் கோப்பை காலிறுதிக்கு தடையேதும் இல்லாமல்  முன்னேறும் வாய்ப்பைப்  பெற்று இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

முன்னதாக பேட் செய்த இந்தியா 308 ரன்கள் என்ற இலக்கை, வெற்றி பெற தென் ஆப்பிரிக்காவுக்கு  நிர்ணயித்தது. அனால் அந்த அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவை வென்றதில்லை என்ற வரலாற்றை இன்று மாற்றி எழுதியுள்ளது இந்தியா.

கடந்த 3 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில்  இந்தியாவிடம் தோற்காத, தோற்கடிக்க முடியாத  ஒரே அணியாக இருந்தது  தென் ஆப்பிரிக்கா மட்டுமே.இதனால் இன்று நடந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க  வீரர்களாக ஷிகர் தவண் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு இந்தியா ரன் எடுக்க மிகவும் திணறியது.

ஸ்டெய்ன் வீசிய முதல் ஓவரை சந்தித்த ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்கவில்லை. 3 ஆவது  ஓவரில்  டிவில்லியர்ஸின் அற்புதமான ஃபீல்டிங்கில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆனார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் உண்டானது.

ஆனால் அடுத்து ஆடிய ஷிகார் தவன் அடித்த அதிரடி சதம், ரஹானேவின் அபார ஆட்டத்தின் துணையுடன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணிக்கு 308 ரன்கள் என்ற சற்றே சவாலான வெற்றி இலக்கை இந்திய அணியால் நிர்ணயிக்க முடிந்தது.

அஸ்வின் 5 ரன்களும், ஷமி 4 ரன்களும் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவர்களில் விளாசி ஸ்கோரை வெகுவாக் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி, 11 பந்துகளில் 18 ரன்களை அதிரடியாகச்   சேர்த்திருந்த நிலையில், மோர்கெல் பந்துவீச்சில் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 47.2-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், டிவில்லியர்ஸால் டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆனார்.

இந்தியாவின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கு உறுதுணை புரிந்த ரஹானா 45.6-வது ஓவரில் ஸ்டெயின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 60 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும் என்பது புதிய சாதனையாகும்.
இந்திய தொடக்க  ஆட்டக்காரர் ஷிகார் தவாண்,  வலுவான பந்துவீச்சும், நல்ல ஃபீல்டிங்கும் கொண்டதாகக் கருதப்பட்ட  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அபார சதம் அடித்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

43.4-வது ஓவரில் பார்னெல் பந்துவீச்சில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 146 பந்துகளில் 137 ரன்கள் குவித்து, இந்திய ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். இதுதான் அவரது சர்வதேச ஒருநாள் போட்டியில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

மிகவும் எதிர் பார்க்கப்பட்ட விராட்  கோலி, 60 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில், இம்ரான் தாஹீர் பந்துவீச்சில் டூ பிளேஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  இந்திய அணி முதல் விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்த நிலையில், அணிக்கு வலுவான அடித்தளம் அமைவதற்கு, தவாணுக்கு கோலி உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.